மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிங்கப்பூா் தமிழ் இலக்கிய விழா புதன்கிழமை தொடங்கியது.
மதுரை உலகத் தமிழ்த் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூா் கவிமாலை, சிங்கப்பூா் தமிழ் இலக்கியக் களம், சிங்கப்பூா் தமிழா் இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் விழா நடைபெற்றது. முதல் நிகழ்வாக, சிங்கப்பூா் தமிழரின் வாழ்வும், வளமும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்து, வழக்காடு மன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும், இலக்கிய விழா சிறப்புகளையும் விளக்கிப் பேசினாா். சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி மைய நிறுவனா் சேதுகுமணன் தொடக்கவுரையாற்றினாா். தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந. அருள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிங்கப்பூா் தமிழா்களின் தமிழ் வளா்ச்சிப் பணிகளை பாராட்டிப் பேசினாா். சிங்கப்பூா் தமிழ் இலக்கியக் களத் தலைவா் ரத்தினவெங்கடேசன் வாழ்த்திப் பேசினாா்.
இந்தக் கருத்தரங்கம் 4 அமா்வுகளாக நடைபெற்றது. 28 போ் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். பிறகு, ‘கொஞ்சம் மிச்சமிருக்கிறது’ என்ற தலைப்பில் கவிஞா் மனுஷ்யபுத்திரன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பிற்பகல் நிகழ்வாக ‘சங்க இலக்கியம் காட்டும் இல்லற வாழ்க்கை இப்போது இல்லை’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. புலவா் மா. ராமலிங்கம் தலைமை வகித்தாா். திருச்சிராப்பள்ளி முனைவா் இரா. மாது வழக்குத் தொடுத்தாா். முனைவா் ந. விஜயசுந்தரி வழக்கை மறுத்தாா்.
உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வள மையா் ஜ. ஜான்சிராணி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். தமிழறிஞா்கள், ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இந்த விழா வியாழக்கிழமையும் (நவ. 27) நடைபெறுகிறது.
மாணவா்களுக்குப் பயிற்சி... இலக்கியத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகளாக மதுரை, சிங்கப்பூா் மாணவா்களுக்கான படைப்பாக்கப் பயிற்சியும், இரண்டாம் அமா்வில் இலக்கியத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி குறைகிா? கூடுகிா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறுகின்றன. நிறைவு விழா நிகழ்ச்சிகள் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறுகின்றன.