பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே சிகிச்சை நிறுத்தம்

மதுரை, நவ. 27: மதுரை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.   தென்மாவட்டங்களின் தலைமை மருத்துவமனையாகத் திகழும

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:15 pm

ஜெயப்பாண்டி

மதுரை, நவ. 27: மதுரை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

  தென்மாவட்டங்களின் தலைமை மருத்துவமனையாகத் திகழும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் சுமார் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வெளிநோயாளிகளாக வந்துசெல்கின்றனர்.

  மேலும், விபத்துகளில் காயமடைந்து தினமும் 50 முதல் 75 பேர் வரை அவசர சிகிச்சைக்கும் வருகின்றனர். இவ்வாறு வருவோரில் தினமும் குறைந்தது 25  பேர் தலைக்காய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர்.

  புறநோயாளிகளில் தலைவலி என வருவோருக்கும், விபத்தில் காயமடைந்து வருவோருக்கும் எக்ஸ்ரே சிகிச்சை அவசியம். இதையடுத்து 99 வது வார்டு, 6 வது வார்டு மற்றும் 51 வது வார்டில் எக்ஸ்ரே சாதனம் அமைக்கப்பட்டுள்ளது.

  இதைத் தவிர்த்து இயங்கும் எக்ஸ்ரே சாதனமும், டிஜிட்டல் எக்ஸ்ரே சாதனமும் தற்போது செயல்பட்டுவருகிறது. இவற்றில் டிஜிட்டல் எக்ஸ்ரே தவிர அனைத்துமே எக்ஸ்ரே பிலிம் மூலம் செயல்படுபவையாகும்.

 தற்போது மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலை உயர்வால், உதகை பிலிம் தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அடுத்து எக்ஸ்ரே பிலிம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் மருத்துவமனைக்கு எக்ஸ்ரே பிலிம் விநியோகிக்கும் நிறுவனமும் தற்போது டெண்டரில் பங்கேற்கவில்லை. இதனால் எக்ஸ்ரே பிலிம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

 இதையடுத்து நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சிகிச்சை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் சிகிச்சை தொடருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், டிஜிட்டல் எக்ஸ்ரேவுக்காக சுமார் 10 வார்டுகளில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. வெளியில் சென்று எக்ஸ்ரே எடுத்துவர நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால் ரூ.300 செலவழித்தே ஏழை நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, தாற்காலிகமாக வெளியிலிருந்து எக்ஸ்ரே பிலிம் வாங்கப்பட்டுள்ளது. இது இரு வாரங்களுக்கு போதுமானதாக உள்ளது என்றாலும், அனைத்து நோயாளிகளுக்கும் எக்ஸ்ரே எடுக்கமுடியாத நிலை உள்ளது என்றனர்.

 சாதனங்கள் சீரமைக்கப்படுமா?    அரசு மருத்துவமனையில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தற்போது ஒரு பகுதி மட்டுமே செயல்படுகிறது. இதனால் அதில் தலைக்காய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதுகுறித்து அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப அலுவலர் கூறுகையில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள காயில் பழுதாகியுள்ளது. ஆகவே புதுக்காயில் பொருத்தினாலே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முழுமையாக செயல்படும் என்றார்.

 இதுபோலவே, சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் சாதனம் 2, மொத்தம் 35 வெண்டிலேட்டர்களில் (செயற்கை சுவாசக் கருவி) 21 கருவிகள் பழுதடைந்துள்ளன. இதனால் சிசுநலப் பிரிவு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் முழுமையான சிகிச்சை நடைபெறவில்லை. இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்க ரூ.15 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 உதவி கிடைக்குமா?   மருத்துவக் கருவிகள் பழுது குறித்து மருத்துவமனை டீன் எட்வின் ஜோவிடம் கேட்டபோது, பழுதை நீக்க போதிய நிதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அந்த நிதியில் பத்தில் ஒரு பங்கு நிதியை மருத்துவமனை நிர்வாகம் அளிக்க உள்ளது. இதற்கான நிதியை தொண்டு நிறுவனத்திடம் பெற்று அளித்ததும் மாவட்ட நிர்வாக நிதி பெறப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.