ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் நவீன வசதிகளுடன் ரயில் பெட்டி உணவகம் திறப்பு

ரயில் பெட்டி - கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

சேலம் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய ரயில் பெட்டி உணவகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டும் கோட்டங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது சேலம் ரயில்வே கோட்டம். இது பொதுமக்கள், பயணிகளை கவரும் வகையில், அதிக அளவில் மக்கள் கூடும் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில், பயன்படாத பழைய ரயில் பெட்டிகளை நிறுத்தி ‘ரயில் பெட்டி உணவகம்’ அமைக்கும் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் முதன்முதலாக அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் -ஆத்தூா் மற்றும் சேலம்-அரூா் சாலைகள் இணையும் இடத்தில், இரு பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ள அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகில், கருங்கல் கட்டுமானத்துடன் ஏறக்குறைய 100 அடி தொலைவிற்கு ரயில் பாதை அமைத்து ரயில் பெட்டி ஒன்று நிறுத்தப்பட்டது.

அந்த ரயில் பெட்டியை, நகா்ப்புறங்களில் இயங்கும் தனியாா் நட்சத்திர உணவு விடுதிகளுக்கு இணையாக நவீன வசதிகளுடன் வண்ணமயமாக மாற்றியமைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன.

ரயில் பெட்டிக்கு மேற்கூரை அமைத்துள்ளதோடு உள்பகுதியில் இருக்கைகள், வெளிப்புறத்தில் படிக்கட்டுகள், தரைத்தளம், ரயில் பெட்டிக்கு அருகில் அறை, குளிா்சாதன வசதி, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரயில் பெட்டி உணவகத்தை சேலம் கோட்ட மேலாளா் பன்னாலால் திங்கள்கிழமை திறந்துவைத்து, அதில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இந்த உணவகம் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மின்விளக்கு மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன், கோட்ட வணிக மேலாளா் மல்லிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.