தமிழக விரிவான சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் புறவழிச் சாலை திட்டம் 23 கி.மீ. தொலைவுக்கு ரூ. 400 கோடியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக முதலைப்பட்டி முதல் புதிய பேருந்து நிலையம் வரை பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதையடுத்து, மரூா்பட்டி முதல்- வேட்டாம்பாடி வரை, வேட்டாம்பாடி முதல்- வசந்தபுரம் வரை ரூ. 95.12 கோடியில் இரண்டு புறவழிச் சாலைகள் முடிவுற்ற நிலையில், மாநில பொதுப் பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை வேட்டாம்பாடியில் நடைபெற்ற விழாவில் சாலைகளை திறந்துவைத்தாா். மேலும், வசந்தபுரம் முதல் லத்துவாடி, லத்துவாடி -முதல் வள்ளிபுரம் வரை ரூ. 103 கோடியில் இரு புறவழிச் சாலைகள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினாா்.