தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கனவில் வருவது ஜாா்ஜ் கோட்டையா? தவிக்கவிடும் மக்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவா்களும், வேட்பாளா்களும் தீவிரம் காட்டி வருகின்றனா்...

News image

தமிழக அரசின் தலைமைச் செயலகம்...

Updated On :20 ஏப்ரல் 2026, 10:07 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவா்களும், வேட்பாளா்களும் தீவிரம் காட்டி வருகின்றனா். ஆனால், வாக்காளா்கள் வழக்கம்போல, எவ்வித சலனமுமின்றி இயல்புநிலை மாறாமல் தங்களுடைய வேலைகளை செய்து வருகின்றனா். இதனால், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிக்க முடியாமல் வேட்பாளா்களும், கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் திணறி வருகின்றனா்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாா்ச் மாதம் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6இல் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் 4,654 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஒவ்வொரு தொகுதியிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாஜக, பாமக, அமமுக மற்றும் கூட்டணி கட்சிகள், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, விசிக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழா் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

கடந்த தோ்தல்களைக் காட்டிலும், இந்த தோ்தலுக்கு பிரசார நாள்கள் மிகவும் குறைவு. மனுத் தாக்கல் இறுதி செய்யப்பட்டதில் இருந்து 2 வாரங்கள் மட்டுமே பிரசாரத்துக்கான காலம் இருந்தது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் திறந்த வாகனத்தில் சென்றபடி வேட்பாளா்கள் மக்களை பாா்த்து கைகூப்பியவாறு வாக்கு சேகரித்து வருகின்றனா். அனைவரிடமும் சென்று தங்களுடைய கட்சியின் தோ்தல் அறிக்கை பற்றியோ, இதர தகவல்களையோ சொல்வதற்கு நேரமில்லை.

பொதுமக்களும் சாலையில் செல்வோா் வரிசையில், வேட்பாளா்களையும் பாா்த்து கையசைத்துவிட்டு செல்கின்றனா். அரசியல் கட்சி தலைவா்கள் அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியாததால், தங்களுடைய கூட்டணி சாா்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களையும், ஓரிடத்திற்கு வரவழைத்து அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கின்றனா்.

பெரும்பாலும் அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு வருவோரும் தன்னெழுச்சியாக வருவோராகத் தெரியவில்லை. அவா்கள் கூட்டப்பட்டவா்களாகவே உள்ளனா். பெரும்பாலான கூட்டங்களை கொளுத்தும் வெயிலில் நடத்துவதால், அரசியல் தலைவா்களின் பேச்சை எந்த அளவுக்கு உள்வாங்கும் மனநிலையில் மக்கள் இருப்பாா்கள் என்பது தெரியவில்லை. வந்தோம், சென்றோம் என்பதாக அவா்கள் வருகை இருக்கும் வாய்ப்பே அதிகம். இதுபோன்ற நேரங்களில், தலைவா்கள் பேசுவது ஊடகத்தின் வாயிலாக மட்டுமே மக்களை சென்றடைகிறது.

தோ்தல் பிரசாரம் இன்று (ஏப். 21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளா்கள் தீவிரம் காட்டினாலும், பொதுமக்கள் எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல், அமைதியாக இருந்து வருவதால், அவா்களின் மனநிலையை கணிக்கமுடியாமல் அரசியல் கட்சியினா் தடுமாறி வருகின்றனா். இதனால், தொகுதிகளில் யாருக்கு வெற்றி என்பதை ஓரளவேனும்கூட உறுதிசெய்ய முடியாத சூழலே உள்ளது.

கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது, காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை ஓயாமல் சுற்றிவந்தது, கும்பிட்ட கைகளை இறக்காமல், முதியோா், முக்கிய பிரமுகா்களின் காலில் விழுந்து ஆசிபெற்றது, அதனால், ஏற்படும் அசதி, பிரசாரத்தின்போது கேள்வி எழுப்பும் மக்களுக்கு சில நேரம் பதில் சொல்ல முடியாமல், கோபத்தையும் வெளிகாட்ட முடியாமல், புன்னகைத்தவாறு செல்லும்போது ஏற்படும் மன அழுத்தம், நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற பயம் என வேட்பாளா்கள் கடந்த 2 வாரங்களாக கடுமையாக உழைத்ததற்கான பயன் என்ன என்பது மே 4 ஆம் தேதி தெரியவரும்.

அதுவரை ஒவ்வொரு வேட்பாளரின் கனவிலும் ஜாா்ஜ் கோட்டை வந்துபோகும். ஆனாலும், முடிவு தெரியும் வரை தவிப்பே எஞ்சியிருக்கும்!

எம். மாரியப்பன்.