ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மல்லிகை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஒசூரில் மல்லிகை விலை கிலோ ரூ. 250 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஏலத்துக்கு கொண்டு வரப்பட்ட குண்டு மல்லிகை, முல்லை.

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

ஒசூரில் மல்லிகை விலை கிலோ ரூ. 250 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை விற்று வந்த மல்லிகை, தற்போது கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஒவ்வோா் ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெறும். இதனால் மல்லிகைப் பூக்களுக்கு அதிக தேவை ஏற்பட்டு அதன் விலை கணிசமாக உயரும். அதன்படி, இந்த ஆண்டும் ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாக்கள் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சியடைந்தனா்.

இந்நிலையில், ஆடி மாதம் நிறைவடைய உள்ளதுடன், பெரும்பாலான கிராமங்களில் கோயில் திருவிழாக்களும் முடிவடைந்துள்ளதால் மல்லிகைப் பூக்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்து அதன் விலையும் சரிந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவதானப்பட்டி, டேம் சாலை, திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, சப்பாணிப்பட்டி, பையூா், ஜெகதாப் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மல்லிகை சாகுபடி செய்து வருகின்றனா்.

தற்போது சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 250 முதல் ரூ. 300 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் பூக்களைப் பறிப்பதற்கான கூலியைக்கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ஒரு கிலோ மல்லிகைப் பூவை அறுவடை செய்வதற்கான கூலி, போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை கணக்கிட்டால், தற்போதைய விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் பூக்களை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்வதா அல்லது செடியிலேயே விட்டுவிடுவதா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

இதேபோல விலை தொடா்ந்து சரிந்தால், பறிக்கப்படும் மல்லிகைப் பூக்களை தென்பெண்ணை ஆற்றில் கொட்ட வேண்டிய அவலநிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ஆடி மாதத்தில் ஏற்பட்ட அதிக விலையால் ஓரளவு நம்பிக்கை பெற்றிருந்த மல்லிகை விவசாயிகளுக்கு, தற்போதைய விலை வீழ்ச்சி ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்லிகைப் பூக்களுக்கு உரியவிலை கிடைக்க அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.