விவசாயிகளிடம் நம்பிக்கையை விதைத்த மழை
கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்த நிலையில், தற்போது பெய்து


கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை, விவசாயிகளிடம் நம்பிக்கை விதையை விதைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி முக்கிய பயிராக சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், மா, தென்னை, புளி, மிளகாய், நெல், நிலக்கடலை, மக்காச் சோளம், கம்பு மற்றும் காய்கறிகளான பீன்ஸ், தக்காளி, முட்டைக் கோஸ், அவரை, பீர்க்கன், சுரக்காய் போன்ற பல்வேறு பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். முல்லை, ரோஜா போன்ற மலர் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலும், மானாவாரி பயிர்களைச் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், தென் மேற்குப் பருவ மழையைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் விளை நிலங்களைத் தயார் படுத்துதல், விதைப்புப் பணிகளைத் தொடங்குவர். கடந்த பருவ மழை பொய்த நிலையிலும், மானாவாரி பயிரான நிலக்கடலை, துவரை, அவரை, சோளம் போன்ற பயிர்களை சில விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடி செய்தனர். ஊடு பயிராக ஆமணக்கு சாகுபடி செய்வது வழக்கம். நிகழாண்டில் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மழை பொய்த்ததால், பயிர்கள் வாடின.
போதிய தண்ணீர் இல்லாததால், சாகுபடி செய்யப்பட்ட அதிக பரப்பிலான பயிர்கள் காய்ந்தும் போயின. இதனால், வேப்பனஅள்ளி, பர்கூர், சூளகிரி, பேரிகை, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை போன்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி, மன வருத்தத்தில் இருந்தனர். இருந்த போதிலும், சில விவசாயிகள், தண்ணீரை விலைக்கு வாங்கி, பயிர்களை உயிர்பித்துக் கொண்டனர்.
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்கள் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை, விவசாயிகளிடம் நம்பிக்கை என்ற விதையை விதைத்துள்ளது என்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் (எஸ்.ஏ.சின்னசாமி) ஜி.ஆர்.லோகாபிராம். மேலும், அவர் தெரிவித்தது: மாவட்டத்தில் நிலவிய வறட்சியின் காரணமாக தீவனம் இல்லாததால், கால்நடைகளை விவசாயிகள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தற்போது பெய்துள்ள மழையால் கால்நடைகளுக்கு குடிக்க நீர் கிடைக்கும். பசும்புல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டாலும், இந்தப் பணியைத் தாமதமாகத் தொடங்கி உள்ளனர். இருந்த போதிலும், நீர் நிலைகளுக்கு வரும் வாய்க்கால்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். நீர் வழிகளான பழைய வாய்க்கால், ஓடை போன்றவை பராமரிக்கப்படாமல் உள்ளன.
மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால், நீர் நிலைகள் தூர்வாரப்படுகின்றன. இவற்றில் மழை நீர் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயரும். நிகழாண்டில் புளி, மா போன்ற மரங்கள் பூக்காமல் போயின. தற்போதைய மழையால், வரும் ஆண்டில் மா, புளிய மரங்களில் பூக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .பொதுவாக, தற்போது பெய்யும் மழை தொடருமானால், வரும் ஆண்டு விவசாயத்துக்கு உகந்ததாக இருக்கும் என்றார்.
வேளாண் அலுவலர் கணேஷ்குமார் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சராசரி மழை அளவு 841 மி.மீ. ஆகும். அதாவது கோடை காலத்தில் 197.7 மி.மீட்டரும், தென் மேற்குப் பருவத்தில் 348.9 மி.மீட்டரும், வடகிழக்குப் பருவத்தில் 288.8 மி.மீட்டர் மழை பெய்யும். கடந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மழை முற்றிலும் பொய்த்து விட்டது. ஒரு மி.மீட்டர் மழை கூடப் பெய்யவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் இயல்பாக 112.4 மி.மீட்டர் மழை பெய்யும். கடந்த ஆண்டு 18.1 மி.மீட்டர் மழை பெய்த நிலையில், நிகழாண்டில் ஆகஸ்டில் கடந்த 5 நாள்களில் மட்டும் 118.8 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இயல்பைக் காட்டிலும் 6 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையை ஏதிர்பார்த்துக் காத்திருந்து நெல் விவசாயிகள், முதிர்ந்த நாற்றுகளை நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சூளகிரி, தளி, அஞ்செட்டி போன்ற பகுதிகளில் ராகி சாகுபடி செய்யும் ஆயத்தப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை காலமான ஜூனில் இயல்பாக 54.2 மி.மீட்டரும், ஜூலையில் 76.9 மி.மீட்டரும், ஆகஸ்ட்டில் 112.4 மி.மீட்டரும், செப்டம்பரில் 106.3 மி.மீட்டரும் மழை பெய்யும். ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டில் ஜூனில் 40.02 மி.மீட்டரும், ஜூலையில் 9.5 மி.மீட்டரும், ஆகஸ்டில் 18.1 மி.மீட்டரும், செப்டம்பரில் 159.4 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நிகழாண்டில் ஜூனில் 33.75 மி.மீட்டரும், ஜூலையில் 38.40 மி.மீட்டரும், ஆகஸ்டில் 118.8 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் தென்மேற்குப் பருவ மழையானது விவசாயிகளுக்கு சாதமாக இருப்பது, விவசாயிகளிடம் நம்பிக்கை என்ற விதையை விதைத்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை முற்றிலும் பொய்த்து போனாலும், நிகழாண்டில் இயல்பான மழை பெய்யும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...