/

சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைந்து வளர்ந்து வரும் தொழில்நகரமான சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

எஸ்.கே ரவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைந்து வளர்ந்து வரும் தொழில்நகரமான சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி,  ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ஒசூர், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகராமான சூளகிரியில்  தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரி வருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சூளகிரியானது வட்டாரமாக அறிவிக்கப்பட்டது.
 சூளகிரி மற்றும் அதைச் சுற்றிலும் 152 கிராமங்கள் உள்ளன.  அரசு மற்றும் தனியார் என 70 மருத்துவமனைகள்,  கிரானைட், ஆயத்த ஆடை உற்பத்தி, அட்டைப் பெட்டி தொழிற்சாலைகள், வாகன உற்பத்திக்கான சிறு தொழிற் சாலைகள், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் என 125-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 
மேலும், 15 பெட்ரோல் விற்பனை நிலையங்கள், 170 அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அலுவலகங்கள், வங்கிகள், சாலையோர உணவகங்கள் என சூளகிரியை சுற்றி உள்ளன.
கிருஷ்ணகிரி - ஒசூர் இரு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள சூளகிரியை கடந்து தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன.  இந்த தேசிய நெடுஞ்சாலைகள் சூளகிரியை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் விபத்துகளால் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. 
இத்தகைய நிலையில்,  சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அவசியம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.  சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் தீ விபத்துகள்,  சாலை விபத்துகள்,  விபத்தில் சிக்கிய கால்நடைகளை மீட்க சூளகிரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு  நிலையம் இல்லாததால் உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன.
சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் விபத்து ஏற்படும்போது,  25 கி.மீ. தூரத்தில் உள்ள கிருஷ்ணகிரி அல்லது 30 கி.மீ. தூரமுள்ள ஒசூர், 27 கி.மீ. தூரமுள்ள ராயக்கோட்டை தீயணைப்பு நிலையங்களை சார்ந்து இருக்க வேண்டும். 
கிருஷ்ணகிரி, ஒசூர், ராயக்கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு வர குறைந்தது ஒரு மணி நேரமாகிறது.  இதனால், விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மீட்க இயலாத நிலை உள்ளது.  கடந்த சில மாதத்துக்கு முன் ரப்பர் தொழிற்சாலை,  பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில்  ஏற்பட்ட தீயை அணைக்க கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.  இதனால், நீண்ட தூரத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வர கால தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், தீயணைப்புத் துறையினரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ. வலியுறுத்தல்: தொழில்நகரமாக வளர்ந்து வரும் சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையிலும், மானிய கோரிக்கையிலும் வலியுறுத்தி வருவதாக வேப்பனஅள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் பி.முருகன் தெரிவித்தார்.  சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைப்பதன் மூலம் சூளகிரி மற்றும் அதைச் சுற்றி 15 கி.மீ.  தூரத்துக்கு ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்களை மீட்க முடியும்.  உரிய நேரத்தில் ஏற்படும் தீயை அணைக்க முடியும். 
சூளகிரியில் தீயணைப்பு நிலையம் இல்லாத நிலையில், கிராம குடியிருப்புகளில் ஏற்படும் தீயை பொதுமக்களே அணைத்து விடுகின்றனர்.  தீயணைப்பு நிலையங்களுக்கு தெரிவிப்பது இல்லை. குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்தால் சான்றிதழ்கள் சேதமடைந்தால், மாற்றுச் சான்றிதழ்கள் பெற தீயணைப்புத் துறையினரின் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் செல்லாததால், துறையினர் சான்றிதழ் அளிக்க இயலாத நிலை உள்ளது. இதனால், கல்வி போன்ற சான்றிதழ்களை பெற இயலாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வேப்பனஅள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் பி.முருகன் தெரிவித்தார். 
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார். இத்தகைய நிலையில், சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசுக்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என அந்தத் துறையின் இயக்குநர் கே.பி.மகேந்திரன் தெரிவித்தார். 
இத்தகைய நிலையில், வளர்ந்து வரும் தொழில்நகரமான சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம், அரசை வலியுறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.