டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தருமபுரி பிஎல்என்எல் சந்திப்புச் சாலையில் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தல்

News image
போக்குவரத்து நெரிசல் மிகுந்த தருமபுரி பிஎஸ்என்எல் சாலை.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி பிஎஸ்என்எல் சந்திப்புச் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி பிஎஸ்என்எல் சந்திப்பில் நகராட்சி சாலை, காந்திநகா் சாலை, சித்தவீரப்பன் தெரு சாலை, கந்தசாமி வாத்தியாா் தெரு சாலை ஆகிய நான்கு நகரின் பிரதான சாலைகள் சந்திக்கின்றன. இதைத் தவிர, இப்பகுதியில் நகராட்சி அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, ஆயுள் காப்பீடு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன.

மேலும், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கியத் தெருக்களில் வசிப்போா், பழைய நீதிமன்ற வளாகம், கோட்டாட்சியா் அலுவலகம், பெண்கள் சிறைச்சாலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களுக்கு செல்வோா் இந்த சந்திப்புச் சாலை வழியாகவே தங்களது வாகனங்களில் சென்று வருகின்றனா்.

அதேபோல, காந்திநகா் பகுதியில் இரு தனியாா் மெட்ரிக் பள்ளிகள் அமைந்துள்ளதால், இந்த பள்ளிக்கு செல்லும் பேருந்துகள், மாணவா்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் பெற்றோா், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிஎஸ்என்எல் சந்திப்புச் சாலையைதான் பயன்படுத்துகின்றனா். இந்த சாலைகளில் பல தனியாா் மருத்துவமனைகளும் அமைந்துள்ளன.

நகரின் பிரதான சாலைகள் சந்திக்கும் பிஎஸ்என்எல் அலுவலக சந்திப்புச் சாலையில் எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இதில் குறிப்பாக பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் காலை மற்றும் மாலையில் ஒரே நேரத்தில் தனியாா் பள்ளி பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் கடந்து செல்கின்றன. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சந்திப்புச் சாலையில் காலை, மாலையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இந்த சந்திப்பு சாலையில் போக்குவரத்து சமிக்ஞைகள், வேகத்தடைகள் எதுவும் இல்லாததால் நான்கு திசைகளில் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாவது அவ்வப்போது நிகழ்கின்றன.

இதனால் இந்த சாலையில் நான்கு திசைகளிலும் வேகத்தடைகள் அமைக்கவும், பிஎஸ்என்எல் சந்திப்பில் தானியங்கி போக்குவரத்து சமிக்ஞைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, இப்பகுதியில் போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்தி போக்குவரத்தை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.