ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு! பரிசல் இயக்கத் தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்கத் தடை...

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:31 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது.

கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் உபரிநீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்தது.

இதையடுத்து ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி, சினி அருவி, பிரதான அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் ஞாயிற்றுக்கிழமை தடைவிதித்துள்ளாா். இதையடுத்து ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறை பூட்டப்பட்டது. இருப்பினும், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீா்வரத்தை தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு:

வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனா். நீா்வரத்து அதிகரித்ததால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியில் குளித்தனா். பரிசல் இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டதால் பரிசல் பயணம் மேற்கொள்ள வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், மீன்கள் விற்பனை நிலையம், உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.