தமிழ்நாடு சிறார் நலக் கொள்கை அமலாக்கப்படுமா?
18 வயதுக்கும் குறைவான சிறார்களைப் பாதுகாக்கும் வகையில் தேசிய சிறார் கொள்கை 2013-இன்படி வடிவமைக்கப்பட்ட


18 வயதுக்கும் குறைவான சிறார்களைப் பாதுகாக்கும் வகையில் தேசிய சிறார் கொள்கை 2013-இன்படி வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு சிறார் நலக் கொள்கையை மாநில அரசு அமலாக்க வேண்டும் என சிறார் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.
அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சிறார் குற்றங்களைத் தொடர்ந்து இந்த கோரிக்கை வலுத்திருக்கிறது.
தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தேசிய சிறார் நலக் கொள்கை கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமலாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கோவா மாநிலத்தில் முதல் முறையாக அம்மாநில சிறார் நலக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டு அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு மாநில சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதேபோன்றதொரு மாநிலக் கொள்கையை வரையறுக்கும் பணிகளை கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள சிறார் உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள், அரசு உயர் அலுவலர்களைக் கொண்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டன.
ஏறத்தாழ 2 ஆண்டுகள் நடைபெற்ற விவாத அரங்குகளின் முடிவில் தமிழ்நாடு மாநில சிறார் நலக் கொள்கை இறுதிப்படுத்தப்பட்டு, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர், முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், இதுவரை சிறார் நலக் கொள்கைகள் ஏற்று முறைப்படி மாநில அரசால் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து கொள்கை தயாரிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தமிழ்நாடு மாநில சிறார் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான முனைவர் டி. ரேவதி கூறியது:
சிறார் திருமணம் தடுப்பு, சிறார் குற்றங்கள் தடுப்பு, சிறார் கடத்தல் தடுப்பு ஆகியவற்றுடன் நின்றுவிடாமல், கல்வி உள்ளிட்டு எல்லா வகையான தாக்குதல்களில் இருந்தும் சிறார்களைப் பாதுகாக்கும் வகையில் அந்தக் கொள்கையை வடிவமைத்தோம்.
ஒரு வேளை அரசுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மீண்டும் அந்த வரைவு அறிக்கையை விவாதத்துக்கு விட்டு சீர் செய்தாவது ஏற்றுக் கொள்ளலாம். அதில் நாங்கள் முரண்படவில்லை. ஏற்கிறோம். ஆனால், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்தக் கொள்கையை அரசு பரிசீலனைக்காவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சட்டப்படியான கட்டமைப்புகளை ஏற்படுத்தியும்கூட குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதன் அவசர- அவசியத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.
அவ்வாறு ஏற்கப்படும் பட்சத்தில் அனைத்துத் துறை சார்ந்த மேலும் கூடுதல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெருகும். எதிர்கொள்கிற மக்கள் மத்தியில், குறிப்பாக அவற்றை கையாளுகிற அரசுத் துறை அதிகாரிகள் மத்தியில் இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்கிறார் ரேவதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...