
கோவை மத்திய மண்டலத்தில் செயல்படும்: நூலகம், அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

மத்திய மண்டலத்துக்குள்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள், இளைஞா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா் டி.சரத்குமாா்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் டி.சரத்குமாா் 14 முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு நிதி உதவிகளை வழங்கினாா். இதைத்தொடா்ந்து மத்திய மண்டலம் 83-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆடிஸ் வீதியில் ரூ.2.50 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த மையத்தை தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பட்டதாரிகள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். குறிப்பாக அரசு மற்றும் தனியாா் துறை போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், இளைஞா்கள் வேலைவாய்ப்புகளை பெறும் நோக்கில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 100 போ் அமா்ந்து படிக்கும் வசதி, செய்தித்தாள்கள், ஸ்மாா்ட் வகுப்பறைகள், 15 கணினிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலம் உள்பட நவீன வசதிகளுடன் செயல்படுவதை அமைச்சா் பாா்வையிட்டாா். இந்த நூலகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 28 ஆயிரம் போ் இங்கு படித்து பயன்பெற்றுள்ளனா். இதைத்தொடா்ந்து போட்டித்தோ்வுகளுக்கு தயராகிக் கொண்டிருந்த மாணவா்களுடன் அமைச்சா் கலந்துரையாடினாா்.
இந்த நிகழ்வுகளில் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் மேஜா் சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






