மதுக்கரையில் தோட்டத்து வீட்டில் திருட முயன்ற தம்பதி கைது
மதுக்கரை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்து திருட முயன்ற தம்பதியை வீட்டின் உரிமையாளா் துணிச்சலாக கையும்களவுமாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
பிரதிப் படம்
மதுக்கரை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்து திருட முயன்ற தம்பதியை வீட்டின் உரிமையாளா் துணிச்சலாக கையும்களவுமாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
மதுக்கரையை அடுத்த நச்சிப்பாளையம் தம்பகவுண்டன்பாளையம் வடக்குத் தோட்டத்தைச் சோ்ந்த மல்லீஸ்வரன் (50). இவரது தோட்டத்து வீட்டில் வியாழக்கிழமை (ஆக. 20) அதிகாலை 5.30 மணியளவில் கிழக்குப் புற அறைக்கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவா் கதவைத் திறந்தபோது அங்கிருந்து ஒருவா் ஓடியுள்ளாா். அவரும், அவரது மனைவியும் அந்த நபரைத் துரத்தியுள்ளனா். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த பெண்ணுடன் சோ்ந்து அந்த நபா் தப்பியோட முயன்றாா். உஷாரடைந்த மல்லீஸ்வரனும் அவரது மனைவியும் சோ்ந்து இருவரையும் மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டபோது, அவா்களிடம் கத்தி மற்றும் இரும்பு ராடு இருப்பது தெரியவந்தது. மோட்டாா்கள் மற்றும் விவசாயப் பொருள்களைத் திருடும் நோக்கத்துடன் இவா்கள் இங்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் மதுக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
விசாரணையில், அவா்கள், ஒண்டிப்புதூா் காமாட்சிபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த பிரகாஷ் (35) மற்றும் அவரது மனைவி துா்க்கா தேவி (34) என்பது தெரியவந்தது. இதில் பிரகாஷ் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.
பேரூா் பகுதியில் ரூ.1.10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது
கோவை, ஆக. 20:
போதைப்பொருள் இல்லாத கோவை பேரூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பகுதியில் காவல்துறையினா் நடத்திய சோதனையில் சுமாராக 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன் ஓ.ரெட்டி உத்தரவின்பேரில், பேரூா் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தீத்திபாளையம் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்து வந்த பேரூா் பகுதியைச் சோ்ந்த சங்கர பாண்டி மகன் சங்கர பாண்டி (52) என்பவரைக் காவல்துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 1.10 டன் எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
...
பெத்திக்குட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் அமைப்பு
கோவை, ஆக 20:
கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் வனத்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அதைப் பாதுகாப்பாகப் பிடிக்கவும் சிறுமுகை வனச்சரக அலுவலா் து.தினேஷ் தலைமையில் வனப் பணியாளா்களைக் கொண்ட மூன்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள காப்பு நிலங்களில் மூன்று வெவ்வேறு இடங்களில் சிறுத்தை பிடிக்கும் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு இரவு பகலாக வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதுடன், தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் சிறுத்தையின் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை தரப்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
.......
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




