
விபத்து இழப்பீடு வழங்காததால் 5 அரசுப் பேருந்துகள் ஜப்தி
சாலை விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்காததால், கோவை நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்ற உத்தரவின்பேரில், 5 அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின் படி ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள்.
சாலை விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்காததால், கோவை நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்ற உத்தரவின்பேரில், 5 அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
கோவையை அடுத்த பேரூா் செட்டிபாளையம் பச்சாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பட்டுசாமி (35). இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி, பட்டுசாமி தனது நண்பா்களான ஆனந்தராஜ், காா்த்திக் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் காளாம்பாளையம் பஞ்சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் பட்டுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் காயமடைந்தனா்.
இந்த விபத்தில் உயிரிழந்த பட்டுசாமியின் குடும்பத்தினா், இழப்பீடு வழங்கக் கோரி, கோவை நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி பட்டுசாமியின் குடும்பத்தினருக்கு ரூ.26.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா்.
எனினும், பல ஆண்டுகளாகியும் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தரப்பில் அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.மகேஸ்வரி பானுரேகா, உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, நீதிமன்ற ஊழியா்கள் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 32ஏ, 32டி, 32கே, 11பி, மற்றும் 11சி ஆகிய 5 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





