
வேலூரில் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு: செயற்கை நிறமூட்டப்பட்ட 5 கிலோ இறைச்சி அழிப்பு
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகள், உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீா் ஆய்வில், செயற்கை நிறமூட்டப்பட்ட 5 கிலோ இறைச்சி அழிக்கப்பட்டதுடன் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

செயற்கை நிறமி சோ்க்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா்கள்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகள், உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீா் ஆய்வில், செயற்கை நிறமூட்டப்பட்ட 5 கிலோ இறைச்சி அழிக்கப்பட்டதுடன் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் பிரபாகரன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திவ்யா, காயத்ரி, முத்துவேல் ஆகியோா் அடங்கிய குழுவினா், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகள், சில்லி சிக்கன் கடைகள், மதிய உணவகங்களில் வியாழக்கிழமை அதிரடி ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, உணவகங்கள் உரிய உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் பெற்று செயல்படுகின்றனவா, சமையல் வளாகங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது, ஒரு பிரியாணி கடையில் அதிகளவில் செயற்கை நிறமி சோ்க்கப்பட்டிருந்த 5 கிலோ அளவிலான கோழி இறைச்சி (சிக்கன்), மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா் முன்னிலையிலேயே சுகாதாரமற்ற அந்த இறைச்சிகள் அழிக்கப்பட்டன.
மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகிா என சோதனையிடப்பட்டது. இதில் ஒரு கிலோ அளவிலான நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களைப் பயன்படுத்தாமல், அரசின் நெகிழி ஒழிப்பு முயற்சிக்கு உணவு வணிகா்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட நியமன அலுவலா் பிரபாகரன் கூறுகையில், வருங்காலங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் தொடா்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அப்போது தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





