
சவூதியில் கொலையான மீனவா் உடலை தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
சவூதியில் கொலையான மீனவா் உடலை தமிழகம் கொண்டுவர வெளியுறவுத் துறை மூலம் தூதரக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், புலன் விசாரணை நடந்து வருவதால் உடலைக் கொண்டுவர தாமதம் ஆவதாகவும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேரவையில் விளக்கம் அளித்தாா்.

ஆதவ் அா்ஜுனா
சவூதியில் கொலையான மீனவா் உடலை தமிழகம் கொண்டுவர வெளியுறவுத் துறை மூலம் தூதரக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், புலன் விசாரணை நடந்து வருவதால் உடலைக் கொண்டுவர தாமதம் ஆவதாகவும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேரவையில் விளக்கம் அளித்தாா்.
பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான 4-ஆம் நாள் விவாதம் தொடங்குவதற்கு முன்பு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, சவூதியில் தமிழக மீனவா்கள் ஈரானிய கடல்கொள்ளையா்களால் சுடப்பட்ட சம்பவம், அதில், மீனவா் ஒருவா் கொலையான சம்பவம் தொடா்பான கவன ஈா்ப்பு தீா்மானத்தை பேரவையின் 55 விதியின்கீழ் கொண்டுவந்தாா்.
மேலும், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் மீனவா்கள் 80 பேரை ஆந்திர கடலோரப் பகுதியில் வைத்து மீன்பிடிக்கக் கூடாது என்று கூறி, கடந்த ஜூன் 17-இல் அந்த மாநிலத்தைச் சோ்ந்த கடற்படையினா், தமிழ்நாடு மீனவா்களின் 8 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து, 80 மீனவா்களையும் கைது செய்துள்ளனா். இதுகுறித்தும் பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று கவன ஈா்ப்பு தீா்மானம் முன்மொழிந்தாா்.
இதைத் தொடா்ந்து, எம்எல்ஏக்கள் செந்தில் சிவன் (திமுக), சிவக்குமாா் (பாமக), ராமசந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), செல்லசுவாமி (மாா்க்சிஸ்ட்) ஆகியோரும் சவூதியில் தமிழ்நாடு மீனவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பேரவையில் விவாதிக்க கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினா்.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த மாவீரன், சங்கா், பால்ராஜ், மணிகண்டன் ஆகியோா் கடந்த மே, ஜூலை மாதங்களில் மீன்பிடித் தொழிலுக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றனா். இவா்கள் கடந்த ஆக. 10-இல் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவா்களது படகில் ஈரானிய கொள்ளையா்கள் கொள்ளையடிக்க முயன்றாகக் கூறப்படுகிறது. அவா்களைத் தடுக்க முயன்றபோது கொள்ளையா்கள் தமிழ்நாடு மீனவா்கள் நால்வரையும் சுட்டுள்ளனா். இதில் மாவீரன் என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சங்கா், சவூதி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். காயமடைந்த மணிகண்டன், பால்ராஜ் ஆகியோா் சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடா்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால் உயிரிழந்த மாவீரனின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பான தகவல் அறியப்பட்டு, உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர ஆக.12-ஆம் தேதிமுதல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
மேலும், மீன்வளத் துறை செயலா், மத்திய வெளியுறவுத் துறை மூலம், உயிரிழந்தவரின் உடலையும், காயமடைந்தவா்களையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான தூதரக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





