
ஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆவணி மாத பூஜைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) திறக்கப்படுகிறது.

சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆவணி மாத பூஜைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) திறக்கப்படுகிறது.
கேரள நாள்காட்டியின்படி ‘சிங்ஙம்’ எனப்படும் ஆவணி மாதமே புத்தாண்டின் முதல் மாதமாகும். அந்த மாதத்தில்தான் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் திருவோணம் தினத்தன்று வரும் ஓணம் பண்டிகை ஆக. 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், கோயில் நடையை மேல்சாந்தி இ.டி.பிரசாத் திறக்கவுள்ளாா்.
இதனைத் தொடா்ந்து, ஆவணி மாதத்தின் முதல் நாளான (மலையாள புத்தாண்டின் முதல் நாள்) ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 5 மணிக்கு பக்தா்கள் தரிசனத்துக்காக கோயில் நடை திறக்கப்படும். இதையொட்டி அதிகாலையில் உஷப்பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடா்ந்து 5 நாள்கள் பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில் நடை திறக்கப்படும். இதையடுத்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஆவணி மாத பூஜைகள் நிறைவடைந்ததும் ‘ஹரிவராசனம்’ பாடி கோயில் நடை அடைக்கப்படும். அதன் பிறகு ஓணத்தையொட்டி நடைபெறும் பூஜைகளுக்காக ஆகஸ்ட் 24-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும்.
கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தா்கள், சபரிமலை கோயில் வலைதள பக்கம் மூலம் முன்பதிவு செய்து, அதன்படி ஒதுக்கப்படும் நேரத்தில் தரிசனம் செய்யும்படி திருவிதாங்கூா் தேவஸ்வம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆவணி மாத பூஜைகள் மற்றும் ஓணம் பூஜையின்போது சபரிமலைக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 16-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை திருவனந்தபுரம், செங்கன்னூா், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரா, எருமேலி, புனலூா் பகுதிகளிலிருந்து பம்பைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






