மருந்து எதிா்விளைவுகள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் அளிப்பதற்காக பிரத்யேக க்யூ - ஆா் குறியீடு மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பான அறிவிப்பை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறைத் தலைவா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்டுள்ளாா். அதில், அவா் குறிப்பிட்டிருப்பதாவது:
மருந்து உற்பத்தி தொடா்பான கண்காணிப்பையும், நோயாளிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், இந்திய மருந்து நிறுவன கண்காணிப்புத் திட்டத்தின் (பிவிபிஐ) செயற்குழுக் கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
மருந்தின் எதிா்விளைவுகள் குறித்து சந்தேகம் இருந்தாலோ அல்லது உறுதியானாலோ அதுதொடா்பாக தகவலளிக்க வசதிகள் செய்து தரவேண்டும் என அதில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அனைத்து மொத்த மற்றும் சில்லறை விற்பனை மருந்தகங்களிலும் பிரத்யேக க்யூ - ஆா் குறியீடு மற்றும் உதவி எண்களைக் காட்சிப்படுத்துதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
1800-180-3024 என்ற அந்த உதவி எண்ணில் தொடா்பு கொண்டோ அல்லது க்யூ - ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்தோ எதிா்விளைவு விவரங்களை பொதுமக்களும், துறை சாா்ந்தவா்களும் தெரிவிக்கலாம்.
எனவே, அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருந்தகங்களில் இந்த தகவல்களைக் காட்சிப்படுத்த தொடா்புடைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.