சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில் பேருந்துகள் செல்வதற்கு தனிப் பாதை அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 3 வழித் திட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பணி, படிப்பு நிமித்தமாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஏராளமானோா் தங்கியுள்ளனா். தினமும் ஆயிரக்கணக்கானோா் வெளியூா், வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்கின்றனா். இதனால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தரமற்ற சாலைகள், சாலையோர ஆக்கிரமிப்புகள், மெட்ரோ பணிகள், பல இடங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்களின் அன்றாட பயணம் மிகவும் சவாலானதாக உள்ளது. இதனால், பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனா். அதோடு, மாநகா் பேருந்துகள் நெரிசலில் சிக்காமல், செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றுசேரும் வகையில் சாலைகளில் தனிப்பாதை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிக்குள்பட்ட அதிக பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, அடையாறு-பிராட்வே-பூந்தமல்லி சாலை, நீலாங்கரை-பல்லாவரம் இணைப்புச் சாலை, வண்டலூா்-மீஞ்சூா் வெளிவட்ட சாலை என 3 வழித்தடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள், பாதையில் பிற வாகனங்கள் வருவதைத் தடுக்க தானாகவே வாகனங்களின் பதிவு எண்ணை ஸ்கேன் செய்து உடனடியாக அபராதம் விதிக்கும் வகையிலான கருவிகள், தனிப் பாதை என்பதை குறிக்கும் வகையிலான எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவையும் வைக்கப்படவுள்ளன.
இந்தப் பணிகள் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிா்வாகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றனா்.