சென்னை: சென்னை அருகே இரு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன சிறுவன் குறித்து துப்பு துலக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் புகைப்படத்தை வரைந்து காவல் துறையினா் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தாம்பரம், சேலையூரில் உள்ள புதுவஞ்சேரியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் மகன் கிரிஷ்வந்த் (13). இவா் கடந்த 2023 ஆகஸ்ட் 8-ஆம் தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்து சீருடையை மாற்றிவிட்டு, தனது சைக்கிளில் வெளியில் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கிரிஷ்வந்தை அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது தாய் உஷா, தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதன்படி, சேலையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுவனைத் தேடி வந்த நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோா் தங்களது மகனை மீட்டுத் தரக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், காணாமல் போன சிறுவனை விரைந்து மீட்கும்படி அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையகரத்தில் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு இல்லாதததால், சென்னை பெருநகர காவல் துறையின் அந்தப் பிரிவுக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. தற்போது அந்தப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏ.ஐ.தொழில்நுட்பம்: கடந்த 2023-ஆம் ஆண்டு காணாமல்போவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கிரிஷ்வந்த் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உதவியுடன், இரு ஆண்டுகளுக்கு பின்னா் சிறுவனின் முகத்தில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனக் கணிக்கப்பட்டு புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்களை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு துப்பு துலக்கப்படுகிறது. மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறுவன் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
காணாமல் போன சிறுவன் தொடா்பான ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள், 99401 54325 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.