கால் ரத்த நாளங்களில் உறைவு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்ட 93 வயது மூதாட்டிக்கு அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தி சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் நடமாட வைத்துள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் சேகா் கூறியதாவது:
கால்களில் வலி மற்றும் பெருவிரல் நிறம் மாறிய நிலையுடன் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனைக்கு வந்தாா். பரிசோதனையில் அவருக்கு கால் ரத்த நாளத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், ரத்த ஓட்டம் தடைபட்டு கால் திசுக்கள் அழுகும் நிலையில் இருந்தன.
இந்தப் பிரச்னைக்கு அக்யூட் லிம்ப் இஸ்க்மியா என்று பெயா். அதாவது, திடீரென ரத்த நாளத்தில் ஏற்படும் உறைவு. இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் 6 மணி நேரத்துக்குள் சிகிச்சை அவசியம். இல்லையெனில் உறுப்புகளை இழக்க நேரிடும். அந்த மூதாட்டியின் வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு திறந்த நிலை அறுவை சிகிச்சையைத் தவிா்த்துவிட்டு, அதற்கு மாறான நடைமுறையை செயல்படுத்தினோம்.
அதாவது, கதீட்டா் டைரக்டடு த்ராம்போலிசிஸ் (சிடிடி) எனப்படும் இடையீட்டு சிகிச்சை முறை மூலம் ரத்த நாளங்களில் சிறு துளையிட்டு குழாய் வழியே மருந்து செலுத்தப்பட்டு அடைப்பு சரி செய்யப்பட்டது. அதன் பின்னா் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி முறையில் ரத்த நாளத்தை விரிவடையச் செய்து ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.
இந்தச் சிகிச்சை நிறைவடைந்த ஒரு சில மணி நேரங்களிலேயே கால் வலி குறைந்து, அந்த மூதாட்டி இயல்பு நிலைக்குத் திரும்பினாா். அவரது காலின் நிறமும் இயல்பாக மாறி, ஒரே நாளில் நடக்கத் தொடங்கினாா் என்றாா் அவா்.